Seed Certification
நார் பயிர்கள் : வீரிய ஒட்டு பருத்தி விதை உற்பத்தி

விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு

வீரிய ஒட்டு இரக பருத்தி உற்பத்தி செய்ய, முன் பருவத்தில் வேறு இரக பருத்தி பயிர் செய்யப்படாத நிலமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் தானாக முளைத்த செடிகளால் ஏற்படும் இனக்கலப்பைத் தடுக்கலாம். நிலம் நல்ல வடிகால் வசதி உடையதும், நல்ல சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

பயிர் விலகு தூரம்

ஆதார நிலை மற்றும் சான்று நிலை வீரிய ஒட்டு இரக பருத்தி விதை உற்பத்திக்கு முறையே 50 மற்றும் 30 மீட்டர் பயிர் விலகு தூரம் வேண்டும். வீரிய ஒட்டு இரகம் பூக்கும் பருவம் முதல் காய்கள் முதிர்ச்சி அடையும் காலம் வரை 30 மீட்டர் தூரத்திற்குள் வேறு பருத்தி இரகங்களும் பூக்கும் பருவத்தில் இருக்கலாகாது.

விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்

பிப்ரவரி- ஜூலை மற்றும் ஆகஸ்ட்- செப்டம்பர்

விதை அளவு

பெண் விதை - 2.00 கிலோ / ஹெக்டேர்
ஆண் விதை - 0.50 கிலோ / ஹெக்டேர்
பெண் மற்றும் ஆண் விதைகளை 8:2 என்ற விகிதத்தில் விதைக்க வேண்டும்.
 
இடைவெளி

ஆண் : 60 X 45 / 90 X 60 செ.மீ
பெண் : 120 X 60 செ.மீ

உரமிடல்

அடிஉரம்- 120 : 60 :50 NPK  கிலோ/ எக்டர்
முதல் மேலுரம் - 12.5 கிலோ தழை சத்து கிலோ/ எக்டர்’( விதைப்பிற்கு 60  மற்றும் 90 நாட்கள் இடைவெளியில்)

இலைவழி உரமிடுதல்

  • 100 பிபிஎம் போரிக் அமிலத்தை (அதாவது 100 மில்லி கிராம் போரிக் அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்) விதைத்ததிலிருந்து 75 மற்றும் 90 நாட்கள் கழித்து ஆண் இரக செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் மகரந்தத்தூள்களின் உற்பத்தியையும் மற்றும் வாழ்நாளையும் அதிகரிக்கச் செய்யலாம்.
  • சாலிசிலிக் அமிலத்தை (250 பிபிஎம்) விதைத்ததிலிருந்து 90 நாட்கள் கழித்து பெண் இரக செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் விதை உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
  •  2 சதவீத டிஎபி 10 நாட்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்கலாம்

கலவன் அகற்றுதல்

ஆண் மற்றும் பெண் இரகங்கள் இரண்டிலும், கலவன்களை சுத்தமாக ஆரம்பத்திலிருந்தே நீக்கி விட வேண்டும். விதைக்காக பயிரிடப்பட்ட பருத்தியில் அந்தக் குறிப்பிட்ட இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற செடிகளையும், களைகளையும் மற்றும் நோய்வாய்ப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்பே நீக்குதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை நீங்களும் உற்பத்தி செய்ய முடியும்.

முக்கிய தொழில் நுட்பங்கள்

  • பெண் செடியில் அடுத்த நாள் மலரும் நிலையில் உள்ள மொட்டுக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (வரைபடம் 1).
  •  பின் மொட்டுக்களில் உள்ள அல்லிவட்டம், புல்லிவட்டம், மகரந்தப் பை போன்றவற்றை சூல்தண்டிற்கோ அல்லது சூல்முடிக்கோ சேதம் ஏற்படாத வண்ணம் கைகளால் நீக்கி விட வேண்டும் (வரைபடம் 2).
  • பின் சிகப்பு நிற காகித பைகளைக் கொண்டு மூடி விடவேண்டும் (வரைபடம் 3). இப்படி செய்வதால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  • இத்தொழில் நுட்பத்தை மாலை 3 மணி முதல் 5 மணி வரை செய்ய வேண்டும். முடிந்த மட்டிலும் அடுத்த நாள் மலரும் நிலையில் உள்ள அனைத்து மொட்டுகளிலும் ஒன்று விடாமல் இத்தொழில் நுட்பத்தைக் கையாள வேண்டும்.
  • அடுத்த நாள் காலை ஆண் செடியிலுள்ள பூக்களைப்பறித்து அப்பூக்களின் மகரந்தத்தூளை சிகப்பு காகிதங்களை அகற்றி பெண் செடியில் உள்ள சூல்முடியில் அனைத்து பக்கங்களிலும் படும்படி தடவவேண்டும் (வரைபடம் 4).
இவ்வாறு தடவியபின் வெள்ளை நிற காகிதபைகளை கொண்டு மூடிவிட வேண்டும். ஒரு ஆண் பூவை 5 பெண் பூக்களுக்க உபயோகிக்கலாம். இதை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும். இதேபோல் தினமும் செய்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வர வேண்டும்.

 

நுனியரும்பு கிள்ளுதல்

செடியின் வளரும் நுனியினை கிள்ளி விடவும் அல்லது  100 பிபிஎம் மலிக் ஹைட்ரோக்சைடு கரைசலை 90  மற்றும் 105  நாட்களில் தெளிக்கவும்.

அறுவடை

  • பருத்தி காய்களை முழுவதும் வெடித்த பின்பு பறிக்க வேண்டும். பருத்தி மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற 45-55 நாட்களில் முதிர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு வார இடைவெளியில், நான்கு அல்லது ஐந்து முறை நன்கு வெடித்த பருத்தி காய்களை பறிக்க வேண்டும்.
  • முதல் நான்கு பறிப்புகளை மட்டுமே விதைப்பருத்திக்காக உபயோகப்படுத்த வேண்டும். ஏனெனில், அதற்குப்பின் பறித்த காய்களின் விதைகள் தரம் குறைந்து காணப்படும்.

காயில் இருந்து விதையைப் பிரித்தெடுத்தல்

நிறம் மாறிய, கொட்டுப்பருத்தி, நன்றாக விரியாத பருத்தி, நோய் மற்றும் பூஞ்சாணம் தாக்கிய காய்களை நீக்கி விட வேண்டும். இவ்வாறு பிரித்தெடுத்த பின் நிழலில் உலர்த்த வேண்டும். விதையின் தூய்மையை மேம்படுத்த அயல் மகரந்த சேர்க்கை செய்த காய்களை தனிமைபடுத்தி அதன் விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.

விதை நேர்த்தி

  • விதைகளை சேமிப்புக்கு முன் கார்பென்டசிம் (2 கிராம்/ கிலோ விதை) கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது
  •  விதைகளை கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இரசாயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமிக்கலாம்
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam